விவசாயி ஒருவர், மாதக்கணக்கில் பாடுபட்டு, பயிரிட்ட உணவுப் பொருளை, மொத்த வர்த்தகர் ஒருவர், உட்கார்ந்த இடத்திலேயே அதை தனக்கு உரிமையாக்கி கொள்கிறார்.
அதுபோலத்தான் இந்தத் திருமண விஷயத்தில் நீங்கள் விவசாயியாக இருக்கப்போகிறீர்களா, அல்லது வர்த்தகராக இருக்கப்போகிறீர்களா, என்பதே என் கேள்வி. விவசாயியைப் போல் இருப்பதும் தவறில்லை. வர்த்தராக இருப்பதும் தப்பில்லை.
இருட்டுப்பாதையில் கையில் விளக்கோடு பயணிப்பது போல, வழியில் என்ன இருக்கிறது, அதை எப்படித் தாண்டிச்செல்வது என்று வழிகாட்டும் ஒளிவிளக்குதான் ஜோதிடம்!
ஜோதிடத்தை நம்பினால்தான் பலனா? நம்பாவிட்டால் பலனில்லையா என்றும் சிலர் கேட்கிறார்கள்.
ஜோதிடத்தை நம்பாதவர்களுக்கு என்ன செய்யும்? ஒன்றும் பிரச்சினையில்லை! விதி செலுத்தும் வழியாக பயணிப்பார். அடுத்து என்ன ஆகும் என்றே தெரியாத ஒரு அட்வெஞ்சர் பயணம்... அதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம். அவ்வளவுதான்.
எனவே ஜாதகத்தை ஆராய்ந்து, திருமண நேரம் வந்துவிட்டதா என்று பாருங்கள். அதன் பிறகு, திருமண ஏற்பாடுகளை தொடங்குங்கள். அனைத்தும் சுபமாக நடந்தேறும் என்பது சத்தியம்.
சரி விரைவில் திருமணம் நடக்கவும், நல்ல வாழ்க்கை துணை அமையவும் என்ன மாதிரியான பரிகாரம் செய்யலாம் என்பதையெல்லாம் பார்ப்போமா.
பெண்களுக்கு திருமணம் நடக்கவும், நல்ல துணை அமையவும் “ ஆண்டாள் அருளிய திருப்பாவை தினமும் காலை, மாலை இரு வேளையும் படித்து வர நல்ல கணவன் அமைவார். அதாவது காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றுங்கள். திருப்பாவை பாராயணம் செய்யுங்கள். முடிந்ததும் ஆண்டாளுக்கு, அம்பாளுக்கு, மகாலக்ஷ்மிக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்யுங்கள்.
அதேபோல், ஆண்கள்... தினமும் அபிராமி அந்தாதி படியுங்கள். மனமொருமித்து அபிராமி அந்தாதி பாடி, சிவ பார்வதியை ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்யுங்கள். நல்ல பெண்... வாழ்க்கை துணையாக அமைவார். மனைவி என்பவளே உங்களுக்கு வரமாவார்!
’அட... எங்களுக்குக் கல்யாணமாகி, பையனும் பொண்ணுமா பெத்து அவங்களே எங்க தோள் உசரத்துக்கு வளர்ந்துட்டாங்க. அவங்களுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறோம்’ என்கிறீர்களா.
உங்கள் பிள்ளைகளுக்கு சீக்கிரம் நல்ல வரன் அமைய... தினமும் காலையில் முருகப் பெருமானை வழிபடுங்கள்.சஷ்டி கவசம் படியுங்கள். தினமும் மாலையில் துர்கையை வழிபடுங்கள். துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றுங்கள். விரைவில் நல்லது நடக்கும். வீட்டில் கெட்டிமேளம் முழங்கும்!
இன்னொரு விஷயம்...
ஏழு சுமங்கலிகளை வீட்டுக்கு அழையுங்கள். அவர்களுக்கு புடவை, ஜாக்கெட், விரலிமஞ்சள், குங்குமம், வளையல் என மங்கலப் பொருட்களை வழங்குங்கள். சீக்கிரமே... மாங்கல்ய வரன் அமைந்துவிடும். மங்கல காரியங்கள் ஊரும்பேரும் சிறக்க கோலாகலமாக நடந்தேறும்.
கும்பகோணம் அருகே உள்ள திருமணஞ்சேரி, மதுரை மீனாட்சியம்மன் முதலான ஆலயங்களுக்குச் சென்று இறை தரிசனம் செய்யுங்கள். மனதார வேண்டிக் கொள்ளுங்கள். விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்பது உறுதி!
அனைத்து பிரச்சினைகளும் தீரவேண்டும் எனில்,
“திருச்செந்தூர் ஆண்டவர்” தான் கதியென்று கந்தவேலனைச் சரணடையுங்கள்.
செந்தில் வேலன் அங்கே சிவமயமாகவும் இருக்கிறார். குரு பகவானாகவும் திகழ்கிறார். தலையெழுத்தை மாற்றும் பிரம்மாவாகவும் அருள்பாலிக்கிறார். வாழ வைக்கும் திருமாலாகவும் அருளாட்சி செய்கிறார். சக்திவேல் தாங்கி சக்தி சொருபமாகவும் வீற்றிருக்கிறார். அவரைத் தரிசிப்பவர்களின் பிரச்சினைகளையெல்லாம் தீர்க்கும் வள்ளலாகவும் எழுந்தருளியிருக்கிறார்.
இவை அனைத்துமே எளிய பரிகாரங்கள். ஆனால் வலிமையான பரிகாரங்கள். அதிக பணம் பிடுங்குகிற பள்ளிக்கூடமே நல்ல பள்ளிக்கூடம் என்று நாம் நினைக்கிறோம் அல்லவா. அப்படித்தான்... அதிகம் செலவு செய்யும் பரிகாரங்களே சிறந்த பரிகாரங்கள் என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி நம்மை நினைக்க வைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த எளிமையான அதேசமயம் சக்தி வாய்ந்த பரிகாரங்களைத் தந்திருக்கிறேன். பயன்படுத்தி நன்மை பெறுங்கள். நலமுடனும் வாழ்க்கைத்துணையுடனும் இனிதே வாழுங்கள்.