நோக்கம்
- விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் திடீரென நோயுற்றாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் இறந்துவிட்டாலோ அதனை ஈடு செய்யும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
- கால்நடையின் மதிப்பு ரூ. 20 ஆயிரத்துக்கு ஒரு வருடம் வரையிலும் காப்பீடு செய்ய தேவைப்படும் தொகை ரூ. 500 இல் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை 50 சதவீதம் வழங்குகிறது. மீதமுள்ள 50 சவீதம் பயனாளியால் வழங்கப்பட வேண்டும்.
- அதற்கு மேல் மதிப்பிற்கோ அல்லது ஒரு வருடத்திற்கு கூடுதலாகவோ பயனாளி காப்பீடு செய்ய விரும்பினால் தேவைப்படும் காப்பீட்டுத்தொகை பிரீமியம் பயனாளியால் செலுத்தப்பட வேண்டும்.
பயன்கள்
- ரூ.500 காப்பீட்டுத்தொகை பிரீமியத்திற்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மானியம் கூடுதலாக ரூ.100 அரசால் வழங்கப்படும்.
- ஒரு பயனாளிக்கு 5 பசுக்கள் வரை காப்பீடு செய்யப்படும். காப்பீடு செய்யப்படும் கால்நடைகள் கால்நடை உதவி மருத்துவரால் மதிப்பீடு செய்யப்பட்டு காதில் வில்லைகள் போடப்பட்டு அடையாளப்படுத்தப்படும்.
வழிமுறைகள்
- காப்பீடு செய்யும் கறவை பசுவின் பயனாளியும் சேர்த்து காதுவில்லை எண் தெரியும்படியாக நிழல்படம் எடுத்து பசுக்கள் காப்பீடு செய்யப்படும்.
- பயனாளிகள் காதுவில்லைகள் தொலையாதபடி கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும். ஒருவேளை தொலைந்துவிட்டால் காப்பீடு செய்த அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவருக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.
- கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கால்நடைகளுக்கு திடீர் இறப்பு நேரும்போது அதிலிருந்து தங்கள் பொருளாதார இழப்பை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கேள்வி பதில்
1. காப்பீடு செய்வதனால் பலன் என்ன?
திடீரென கால்நடைகளில் இறப்பு ஏற்படுமாயின் அதனால் பண்ணைகளில் ஏற்படும் இழப்பிலிருந்து விடுபடுவதற்கான ஒரு வழிமுறைதான் காப்பீடு.
2. எந்தெந்த கால்நடைகளுக்கு காப்பீடு அளிக்கப்படுகின்றது?
ஆடு, மாடு, பன்றி, குதிரை மற்றும் நாய்.
3. கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய எங்கே அணுகுதல் வேண்டும்?
அருகில் உள்ள காப்பீடு வங்கிகளுக்கு சென்று அணுகலாம்
4. காப்பீடு செய்வதற்கு கால்நடைகளுக்கு வரையறை இருக்கின்றதா?
ஆம். காப்பீடு செய்யப்படும் கால்நடைகள்
- ஆரோக்கியத்துடன் இருத்தல் வேண்டும்
- நோயின்றிக் காணப்படுதல் வேண்டும்
- எந்த விதமான காயங்களும் இன்றி இருத்தல் வேண்டும்
ஆதாரம் : கால்நடை பராமரிப்புத் துறை தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை